Friday 3rd of May 2024 11:46:24 AM GMT

LANGUAGE - TAMIL
-
அன்டோனியோ பிளிங்டனின் இந்திய விஜயம் சீன - இந்திய விரிசலை தீவிரப்படுத்துவதற்கானதா?

அன்டோனியோ பிளிங்டனின் இந்திய விஜயம் சீன - இந்திய விரிசலை தீவிரப்படுத்துவதற்கானதா?


உலகளாவியரீதியில் சீனாவின் எழுச்சி மேற்குலகு நாடுகளுக்கு சவாலானதொன்றாக மாறியுள்ளது. பொருளாதார இராணுவ தொழில்நுட்பரீதியில் முதன்மை நிலையை நோக்கி நகரும் சீனா தென்னாசியாவை பிரதான அரசியல் களமாக கையாண்டுவருகிறது. ஆசியாவில் இதர பகுதிகளை விட தென்னாசியவை இலக்கு வைத்திருப்பது இந்து சமுத்திரத்தை நோக்கி சீனாவின் கடலாதிக்கம் நிரம்பி வருவதும் முக்கியமான அரசியல் விடயமாக புலப்படுகிறது. அத்தகைய முக்கியத்துவம் இந்தியா சார்ந்ததாகவே உலகளாவிய ஆய்வு தளத்தில் முதன்மைப்படுத்தப்படுகிறது. அதற்கான காரணமும் அதற்கான முக்கியத்துவமும் புரிந்து கொள்ளப்படுதலே அவசியமாகும். அத்தகைய புரிதல் இந்திய-சீனா சார்ந்தது என்பதைக் காட்டிலும் இந்தியா - அமெரிக்கா சார்ந்ததாக விளங்கிக்கொள்ளப்படுதல் அவசியமானதாகும். இக்கட்டுரையில் அமெரிக்க-இந்திய உறவு தென்னாசிய நோக்கிய சீனாவின் விரிவாக்கம் சார்ந்தும் அமையவுள்ளது.

அமெரிக்க வெளியுறவுச்செயலாளர் அன்டோனியோ பிளிங்டன் இரண்டு நாள் விஜயமாக 28.07.2021 அன்று இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அவரது வருகை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க-இந்திய உறவு பனிப்போருக்கு பிந்திய காலப்பகுதியில் ஏற்பட்ட போதும் நரேந்திர மோடி அரசானது ஆட்சிக்கு வந்த பின்னர் (2014) இருநாட்டுக்குமான நெருக்கம் அதிகரித்துள்ளது எனக்கருத முடியும். நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் அமெரிக்காவுடனான உறவை முதன்மைப்படுத்தினாலும் சமதளத்தில் ரஷ;சியாவுடனும் ஏனைய ஆசிய நாடுகளுடனும் உறவை பேணி வந்தனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி 2016ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் மேற்கொண்ட பாதுகாப்பு உடன்படிக்கை அதன் நெருக்கத்தை மேலும் பலப்படுத்தி விட்டது. இதனால் இந்தியா சுயமாக முடிவெடுக்க முடியாமலும் தனது புவிசார் அரசியலை மட்டுமன்றி புவிசார் பொருளாதாரத்தையும் கட்டமைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவுடன் வர்த்தகரீதியிலான உறவை அதிகரிக்க திட்டமிடுகின்ற சந்தர்ப்பங்களில் அமெரிக்க-இந்திய உறவு மீள மீள புதுப்பிக்கப்படுவதாகவே தெரிகிறது. அதாவது சீனாவின் கொழும்பு துறைமுக நகர பிராந்தியத்துக்கான முதலீட்டில் இந்தியா தனித்து செயற்பட முடியாது ஜப்பான், அமெரிக்க கம்பனிகளோடு சேர்ந்த முதலீடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்படுகிறது. அவ்வாறே திருகோணமலை துறைமுகத்தை அண்டிய பகுதியில் 5 வருட குத்தகைக்கு அமெரிக்கா பெற்றுக்கொண்ட 33000 ஏக்கர் பரப்பில் இந்தியா அமெரிக்க, ஜப்பான் கம்பனிகளுடன் சேர்ந்தே முதலீடு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கொள்லைப்புறத்தில் அமைந்துள்ள இலங்கையில் இந்தியா நேரடியாக முதலீடு செய்து கொள்ள முடியாத நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. இத்தகைய நெருக்கடிக்கு பின்னால் இந்திய அரசியல் தலைமைகளே காரணமாக தெரிகிறது. அமெரிக்கா இந்தியாவோடு நெருக்கமான உறவு கொள்வதென்பது அமெரிக்க நலனுக்கானதே அன்றி இந்தியாவின் வளர்ச்சிக்கானது அல்ல. அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்க வெளியுறவுச்செயலளார், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் போன்றவர்களின் தொடர்ச்சியான இந்தியா நோக்கிய பயணமானது, இந்தியாவை பிராந்திய ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் செழிப்பினை அடைந்து விடக்கூடாதென்ற கரிசனை கொண்ட நகர்வாகவே தெரிகிறது. ஒருபுறம் சீனாவின் நெருக்கடி மறுபுறம் அமெரிக்க மற்றும் மேற்குலகின் நட்பு கலந்த நெருக்கடி இந்தியாவின் அரசியல் பொருளாதார இராணுவ இருப்புக்கு சவாலானதாக அமைகிறது. இதனை சற்று விரிவாக நோக்குதல் அவசியமாகும்.

முதலாவது, அமெரிக்க வெளியுறவுச்செயலாளர் அன்டோனியோ பிளிங்டனின் விஜயம் பல நோக்கங்களை கொண்டு அமைந்தாலும் பிரதானமாக சீனாவிற்கும் இந்தியாவிற்குமிடையில் அண்மைக்காலமாக வளர்ந்து வரும் வர்த்தக உறவை தகர்ப்பதாகவே தெரிகிறது. கோவிட் தொற்று தொடர்பாக அமெரிக்கா இந்தியாவிற்கு வழங்கிய தடுப்பூசிகளின் போதாமை மட்டுமன்றி அதனை விற்பனை செய்ததாலும் இந்தியா பாரிய நெருக்கடியை உள்நாட்டில் எதிர்கொண்டுள்ளது. எனவே இதனை சரிசெய்ய சீனாவுடனான உரையாடலை இந்தியா மேற்கொண்டு விடக்கூடாது என்பதில் அமெரிக்கா கரிசனை கொண்டுள்ளது. குவாட் நாடுகள் கூடிய சந்திப்பொன்றில் அதேபோன்று ஜி-7 நாடுகளின் சந்திப்பிலும் வறிய நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பான நடவடிக்கையை மேற்கொள்ள மேற்குலக நாடுகள் திட்டமிட்டுள்ளன. இது பெருமளவுக்கு சீனாவின் தடுப்பூசிக்கு எதிரான ஒரு அரசியலாகவே தெரிகிறது.

இரண்டாவது, குவாட் நாடுகளின் சந்திப்பொன்றை இந்த வருடத்தின் இறுதி மாதத்தில்; மேற்கொள்ள வோசிங்டன் திட்டமிடுகிறது. குவாட் அமைப்பில் பிரதான அங்கம் பெறும் இந்தியா அதிலிருந்து விலகுவதோ அல்லது தனித்து செயற்படுவதோ குவாட் நாடுகளின் எதிர்காலத்துக்கு மட்டுமன்றி அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் நலன்களுக்கு ஆபத்தாக அமையுமென மேற்குலகம் கருதுகின்றது. இதனால் இந்து சமுத்திர பிராந்தியத்திலும் இந்தோ-பசுபிக் பிராந்தியத்திலும் சீனாவினுடைய ஆதிக்கத்தை சீனாவின் எல்லைக்குள் வைத்து இந்தியா மூலம் தோற்கடிக்க அமெரிக்கா முனைகின்றது.

மூன்றாவது, அமெரிக்காவின் இராணுவரீதியிலான ஒத்துழைப்பும் நெருக்கமும் இந்திய-சீன மோதலை உருவாக்கி இரு அரசுகளதும் பொருளாதாரத்தை சிதைவடைய செய்து மீளவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை உத்தரவாதப்படுத்தும் முனைப்பாகவே தெரிகின்றது. மிகப்பிந்திய இராணுவரீதியிலான ஆயுத தளபாடங்கள், விமானங்கள், ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் தொழில்நுட்ப திறனுடைய குறுந்தூர ஆயுதங்கள் போன்றவற்றை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா 2020களில் பல உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அத்தகைய ஆயுதங்கள் நேரடியான போர்களுக்கும் எல்லைப்போர்களுக்கும் பயன்படுத்தப்படுகின்ற வகைகள் என்பத குறிப்பிடக்கூடியதாகும்.

நான்காவது, இந்தியா தனது கடற்படை விரிவாக்கத்தை பலப்படுத்தம் நோக்கில் பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ;சியா, தென்கொரியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கம்பனிகளுடன் கடந்த 2020ஆம் ஆண்டு உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளது. இத்தகைய உடன்படிக்கை அமெரிக்காவின் பாதுகாப்பு உடன்படிக்கையிலிருந்து விலகிச்செல்வதாகும், இந்தியா அவ்வாறு செயற்பட முடியாததெனவும் அமெரிக்காவில் வெளிவரும் Foreign Policy என்ற இதழின் ஜூலைப் பதிப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்தியா அமெரிக்காவை விலகி பாதுகாப்பு நடவடிக்கைகளில் செயற்பட முடியாதென அவ்விதழ் குறிப்பிடுவதுடன் தென்னாசியாவிலும் குறிப்பாக இலங்கைக்குள்ளும் இந்தியா கடந்த காலத்தில் மேற்கொண்ட கொள்கைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டுமென குறிப்பிடுகிளன்றது.

ஐந்தாவது, சீனா தென்னாசிய பிராந்திய ரீதியில் இந்தியாவை போன்று பொருளாதார இராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்த திட்டமிடுகின்றது. அத்தகைய திட்டமிடலுக்குள் ஜூலை மாதத்தின் ஆரம்ப பகுதியில் பூட்டான் தவிர்ந்த ஏனைய தென்னாசிய நாடுகளுடன் இணைந்து வறுமை ஒழிப்பு மற்றும் ஒத்துழைப்பு மேம்பாட்டு மையம் ஒன்றை உருவாக்கி உள்ளது. (Poverty Alleviation and Cooperative Development Centre) இவ்அமைப்பு இந்தியாவால் உருவாக்கப்பட்ட BIMISTIஊர் மற்றும் IOR போன்றவற்றுக்கு நிகரானதாக அமைந்திருப்பதோடு அமெரிக்காவின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள குவாட் அமைப்பையும் கடந்த ஏப்ரலில் குவாட் நாடுகளின் தலைமையில் இந்தியாவால் ஆரம்பிக்கப்பட்ட Supply Chain Resilience Imitative போன்றவற்றுக்கு எதிரானதாக உருவாக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் வளர்ச்சி நெருக்கடிக்கு உள்ளாக்குவதுடன் அதனூடாக இந்தியாவின் வளர்ச்சியை முறியடிப்பதும் சீனாவின் பிரதான உபாயமாக உள்ளது.

எனவே, இந்தியா நோக்கிய அமெரிக்க அணுகுமுறையும் சீனாவின் உபாயமும் ஒரே மாதிரியான விளைவை இந்தியாவுக்கு ஏற்படுத்தி வருகிறது. இந்தியா வரலாறு முழுவதும் ஜவர்ஹலால் நேரு வகுத்த அணிசேராமை என்பதனால் கட்டியெழுப்பப்பட்ட தோல்விகரமான கொள்கையை தொடர்வதாகவே தெரிகிறது. இத்தகைய நெருக்கடியை சரிசெய்ய முடியாத சூழலுக்குள் இந்தியா தள்ளப்பட்டுள்ளதுடன் இந்தியாவின் எதிர்காலம் அமெரிக்க சீனா இழுபறிக்குள் மீள முடியாத ஒன்றாக அமைய வாய்ப்புள்ளது. கொள்கை வகுப்பாளர்களும் ஆட்சியாளர்களும் விடுகின்ற தவறுகளால் இந்திய தேசத்தினுடைய வலிமை காணாமல் போயுள்ளது. சீனாவை எதிர்கொள்ள அமெரிக்காவுடனும் அமெரிக்காவை எதிர்கொள்ள இன்னுமொரு நாட்டிடமோ இந்தியா சரணடைய வேண்டிய கொள்கைகளையே பின்பற்றி வருகின்றது. அன்டோனியோ பிளிங்டனின் இந்திய விஜயம் அமெரிக்க-இந்திய நெருக்கத்தை ஏற்படுத்துவதிலும் சீன-இந்திய விரிசலை பலப்படுத்துவதாகவே அமையும். இது இந்தியாவின் புவிசார் அரசியலையும் பொருளாதாரத்தையும் ஆபத்தான நிலைக்குள் தள்ள வாய்ப்புள்ளது.

-அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE